பதிவு செய்த நாள்
18
ஆக
2015
03:08
பசுவானது பால் தருகிறது. இந்தப் பால் பசுவின் உடலில் ஓடும் ரத்தத்தில் கலந்து, அதன் உடல் முழுவதுமே இருக்கிறது. ஆயினும் பசுவின் காதைப் பிழிந்தால், பால் வருமா? வராது. பசுவின் மடியில் தான் பால் சுரக்கும். உலகமெல்லாம் கடவுள் என்பது உண்மை. ஆயினும் பசுவின் உடலில் பால் சுரக்கும் மடியைப் போன்றது. புண்ணிய க்ஷேத்திரங்களின் மகிமை. அங்கே பக்தர்கள் சென்று, அந்த ஸ்தலங்களில் சுரக்கும் பக்தியைப் பெற்று, பகவானை அடைகிறார்கள். தலைமுறை தலைமுறையாகப் பல பக்தர்கள் தவமும் தியானமும் செய்த அந்த ஸ்தலங்களில் ஆண்டவன் தன் தரிசனத்தை எளிதில் தருகிறான். எண்ணற்ற பக்தர்களுடைய தவம், ஜபம், தியானம், பூஜை, பிரார்த்தனை இவற்றின் புகை அங்கே படிந்து நிற்கிறது. அது அவ்விடம் பக்தியுடன் செல்லும் மக்களின் உணர்ச்சியைத் தன்மயமாக்கும். பக்தர்களின் கால் தூசி பட்டாலுமே போதும் என்று சொல்வது இதுதான். கோடிக்கணக்கான பக்தர்கள் - படித்தவர்கள், படிப்பில்லாத பாமரர்கள் - விழுந்து புரண்டு வழிபட்ட இடங்களுக்குத்தனியொரு சக்தி உண்டு. உலக வாழ்க்கையையும், ஆசைகளையும், நீக்கி உள்ளம் உருகி ஆடியும் பாடியும் புனிதமாக்கிய ஸ்தலங்களுக்கு நாமும் சென்று நம் உள்ளத்தை ஆண்டவன் பாதங்களில் சமர்ப்பித்தால் நம்முடைய கல்மனமும் உருகும், ஆனபடியால் அத்தகைய இடங்களில் எங்கும் பரவி நிற்கும் ஈசனை எளிதில் காணலாம்.
பூமியை எங்கேயும் தோண்டி ஜலம் எடுக்கலாம். ஆனால் சில இடங்களில் ஏற்கெனவே கிணறும் குளமும் ஏரியும் தயாராக இருக்கின்றன. அவற்றை நாம் அடைந்து சுலபமாகத் தாகம் தணித்துக் கொள்ளலாம். அல்லவா? - அப்படியே கோயில்களும் க்ஷேத்திரங்களும், தீர்த்தங்களும், பக்தி தாகத்தை அவ்விடங்களில் சிரமமில்லாமல் தீர்த்துக் கொள்ளலாம். க்ஷேத்திரங்களைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாடுகள் வயிறு நிறையப் புல் மேய்ந்து விட்டு ஒரு இடத்தில் படுத்து அசை போடுவது போல், புண்ணிய ஸ்தலங்களுக்குப் போய் பூஜை முதலியவை செய்தான பிறகு ஸ்தல மகிமையின் பயனாக அடைந்த புனித எண்ணங்களை நாம் அசைபோட வேண்டும்.
யாத்திரை முடிந்ததும் கடமை தீர்ந்துவிட்டது என்று எண்ணிப் பக்தியையும் புனித எண்ணங்களையும் அங்கேயே விட்டு விடாமல், தனிமையான இடத்தைத் தேடி உட்கார்ந்து, தியானத்தில் மனதைச் செலுத்தி அடைந்த பக்தியை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அடைந்து பயனைச் சீக்கிரத்தில் இழந்து விடுவோம். புண்ணிய ஸ்தலங்களுக்குப் போவதில் மட்டும் அல்லது அங்கே குடியிருப்பதில் மட்டும் பயன் அடைய முடியாது. உள்ளத்தின் நிலைமையே முக்கியம், உள்ளத்தில் பக்தி இருந்தாலொழிய ஸ்தல விசேஷத்தின் பயன் அடையமாட்டோம். உள்ளத்தில் பக்தியிருந்தால் புண்ணிய ஸ்தலங்களில் அதை விருத்தி செய்து கொள்ளலாம். அந்த பக்திஐவேஜு உள்ளத்தில் இல்லாத பட்சத்தில் எந்த க்ஷேத்திரத்துக்குப் போவதிலும் ஒன்றும் பிரயோசனமில்லை.
வீட்டில் சண்டை பிடித்துக்கொண்டு பையன் காசிக்கோ! வேறு புண்ணிய ஸ்தலத்துக்கோ ஓடிப் போகலாம். அங்கே வேலையில் அமர்ந்து சம்பாதிக்கலாம். பிறகு தாய் தகப்பனுக்கும் கொஞ்சம் அனுப்பலாம். ஆனால் இது வேறு, பக்தி சம்பாதிப்பது வேறு.
ஒரு சமயம் ராமகிருஷ்ணர் வேடிக்கையாகச் சொன்னார்; நானும் மதுரநாதரும் மேற்கே ஒரு புண்ணிய ஸ்தலத்துக்குப் போனோம். அங்கே மாமரங்களும் மூங்கில் புதர்களும் நம்முடைய ஊரில் இருப்பது போலவே தான் இருந்தன. வித்தியாசம் ஒன்றும் நான் காணவில்லை. ஆனால் ஒரு விசேஷம். இந்தப் புண்ணிய ஸ்தலங்களில் குடியிருக்கும் ஜனங்களுக்கு நல்ல ஜீரண சக்தி, எவ்வளவு சாப்பிட்டாலும் ஜரித்துக் கொள்ளுகிறார்கள். என்றார். பக்தி செய்யாமல் புண்ணி ஸ்தலங்களில் இருப்பதில் ஒரு விசேஷமுமில்லை என்பதை எடுத்துக் காட்ட இப்படிச் சொன்னார்.